படையின் பரப்பு

அறுசீர் ஆசிரியவிருத்தம்

5754.

உடைந்தவல்இருள் நோற்று, பல் உருக் கொடு, அக்
                             கதிர்க் குழாங்கள்
மிடைந்தனமிலைச்சியாங்கு, மெய் அணி பலவும்
                             மின்ன,
குடைந்து வெம்பகைவர் ஊன் தோய் கொற்றப்
                        போர் வாள் வில் வீச,
அடைந்த, கார்அரக்கர் தானை, அகலிடம் இடம்
                         இன்று என்ன.

     கார் அரக்கர்தானை - கருநிறமுள்ள அரக்கர்கள் கூடிய சேனை;
உடைந்தவல் இருள் -
முன்பு சூரியனுக்குத் தோற்ற வலிய இருட்டு; நோற்று
-
(சூரியனை வெல்லும் பொருட்டு) தவம் செய்து; பல் உருகொடு - (அத்
தவத்தின் பயனாக) கரிய பல உருவங்களைக் கொண்டு; அக்கதிர் குழாங்கள்
-
அச்சூரியனது கிரணங்களின் கூட்டங்களை (தான் வென்று கவர்ந்து);
மிடைந்தன -
நெருக்கமுள்ளனவாக; மிலைச்சி ஆங்கு - (தான்
வென்றமைக்கு அடையாளமாக) அணிந்து கொண்டது போல; மெய் அணி
பலவும் மின்ன -
(இருள் மயமான தம்) உடம்பில் பூண்ட ஆபரணங்கள்
மின்னவும்; வெம் பகைவர் ஊன் குடைந்து - கொடிய பகைவருடைய
உடலில் முழுகி; தோய் கொற்ற போர் வாள் - அந்த ஊன் படிந்தனவும்,
வெற்றியைத்தரும் போரைச் செய்ய வல்லனவுமான வாளாயுதங்கள்; வில்வீச -
ஒளியை வீசவும்; அகலிடம் இடம் இன்று - நில உலகம் இடம் போதாது;
என்ன -
என்று சொல்லும்படி; அடைந்த - (இந்திர சித்தை) அடைந்து வந்து
கூடிற்று.

     கரிய அரக்கர்ஒள்ளிய அணிகளைப் பூண்டிருந்தது, சூரியனுக்குத்
தோற்ற வலிய இருள், தவம் செய்து பல வடிவம் கொண்டு சூரியனை வென்று
அவனது கதிர்க்கற்றைகளைத் தன் மேனியில் அணிந்து கொண்டது
போன்றிருந்தது. இத்தகைய அரக்கர் சேனை, மிகுதியாக இந்திர சித்தை வந்து
கூடிற்று என்பதாம்.                                         (38)