5755.

ஆழிஅம்தேரும், மாவும், அரக்கரும், உருக்கும்
                                செங் கண்
சூழி வெங் கோபமாவும், துவன்றிய நிருதர் சேனை,

ஊழி வெங்கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை
                                 தீர்ப்பான்.

     ஆழி அம் தேரும்- சக்கரங்களோடு கூடிய அழகிய தேரும்; மாவும்,
அரக்கரும் -
குதிரைகளும், காலாட்படையினராகிய அரக்கர்களும்; உருக்கும்
செங்கண் -
கோபித்து நோக்குகின்ற; சூழி வெங்கோபமாவும் - சிவந்த
கண்களை உடையனவும் முகபடாத்தை அணிந்தனவும் கொடிய சினத்தை
உடையனவுமான யானைகளும்; துவன்றிய நிருதர் சேனை - கூடி நிறைந்த
அரக்கர் படை; ஊழிவெங்கடலின் சுற்ற - யுகமுடிவின் காலத்தில் பொங்கி
எழும் கடலைப் போன்று தன்னைச் சூழ்ந்து வர; வீரத்தின் பன்மை
தீர்ப்பான் -
வீரத்தின் சிறப்பு பலரால் பங்கிட்டுக் கொள்ளப் பெறாது, தன்
ஒருவனுக்கே உரிமையாகப் பெற்ற மேகநாதன்; தனி நடுவண் நின்ற -
ஒன்றேயாகத் தனித்து அவ் வெள்ளத்தின் இடையே விளங்கி நின்ற; ஒரு
பாழிமா மேரு -
ஒப்பற்ற பருத்த மகா மேரு என்னும் மலையை; ஒத்தான் -
ஒத்து விளங்கினான்.

     அரக்கர்நால்வகைப் படையும் கடலாகவும், கடல் நடுவே நின்ற
மேருமலை இந்திரசித்தாகவும் கூறப்பட்டது. வீரத்தின் பன்மை தீர்ப்பான்
என்பது பிறரது வீரத்தை வென்றொழிப்பவன் என்று பொருள்படும்.    (39)