போர்க்களத்தைநோக்கிய இந்திரசித்தின் மனநிலை 5757. | இலை குலாம்பூணினானும், 'இரும் பிணக் குருதி ஈர்த்து, அலகு இல் வெம்படைகள் தெற்றி, அளவிடற்கு அரிய ஆகி, மலைகளும்,கடலும், யாறும், கானமும் பெற்று, மற்று ஓர் உலகமே ஒத்தது,அம்மா ! போர்ப் பெருங் களம்' என்று உன்னா, |
இலைகுலாம்பூணினானும் - இலை வடிவமாகச் செய்தஅணிகளை அணிந்த இந்திர சித்தும்; பெரும் போர்க்களம் - அந்தப் பெரும் போர்க்களமானது; இரும்பிணம் - போரில் இறந்த அரக்கர்களது பெரும் பிணங்களின்; குருதி ஈர்த்து - இரத்த வெள்ளத்தில்; அலகு இல் வெம்படைகள் - அளவில்லாத கொடிய ஆயுதங்கள்; தெற்றி - அலைக்கப் பெறுதலால்; அளவு இடற்கு அரியஆகி - அளவிட்டுக் கூற முடியாதனவாகி; மலைகளும் கடலும் - மலைகளையும், கடல்களையும்; யாறும் கானமும் - ஆறுகளையும், காடுகளையும்; பெற்று - தன்னிடம் அமையப் பெற்று; மற்றும் ஓர் உலகமே - வேறு ஓர் உலகமே போல; ஒத்தது என்று உன்னா - பரந்துகிடந்தது என்று கருதி. அம்மா, வியப்பைஉணர்த்தும் இடைச்சொல். 'விம்மல் கொண்டான்' என்று அடுத்த கவியின் தொடரோடு முடியும். பிணங்கள் மலைகளாகவும், இரத்தம் கடலாகவும் ஆறாகவும், ஆயுதங்கள் காடாகவும் தோற்றம் அளித்தன. அதுகண்டு மற்றும் ஓர் உலகமே என்று வியந்தான் மேகநாதன் என்க. (41) |