வெப்புஅடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்; 'அப்பு அடை வேலைஅன்ன பெருமையார், ஆற்றலோடும் ஒப்புஅடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே ! எப் படை கொண்டுவெல்வது, இராமன் வந்து எதிர்க்கின் ?' என்றான்.
வெப்புஅடைகில்லா நெஞ்சில் - (இதுவரை வருத்தத்தால்)தவிப்பு அடையாத தனது உள்ளத்தில்; சிறியது ஓர் விம்மல் கொண்டான் - ஒரு சிறுஏக்க உணர்ச்சி கொண்டான் (மற்றும்); அப்பு அடை வேலை - நீர் நிறைந்தகடல் போன்ற; அன்ன பெருமையோர் - (அளக்க ஒண்ணாப்) பெருமைஉடையவர்களும்; ஆற்றலோடும் ஒப்பு அடைகில்லார் - தம் வல்லமையுடன்ஒப்புமை அடையப் பெறாதவர்களுமான; எல்லாம் உலர்ந்தனர் - அரக்கவீரர்கள் யாவரும் (இப்போரில்) அழிந்தனர்; குரங்கும் ஒன்றே ! -(இவ்வளவு வீரர்களையும் கொன்ற) குரங்கும் ஒன்றேதான் உள்ளது; இராமன்வந்து எதிர்க்கின் - (இனி மற்ற வானரங்களுடன்) இராமன் வந்து நம்மைஎதிர்த்துப் போர் புரிந்தால்; எப்படை கொண்டு வெல்வது ? என்றான் -எந்தப் படைகளைக் கொண்டு எதிர்த்து வெற்றி கொள்வது ? என்றும் சிந்தைகொண்டான்.
போரில் வல்லபலரையும் கொன்ற அனுமனைக் கண்டு வியந்த மேகநாதன் இது போன்ற வானர வீரர்களுடன் இராமன் வந்து போர் செய்தால் வெல்வது எப்படி என்று சிந்தனை செய்தான். (42)