5760. | 'கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், யானுடை எம்பிவீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம், மானிடர்இருவராலும், வானரம் ஒன்றினாலும், ஆனிடத்து உள;என் வீரம் அழகிற்றே அம்ம !' என்றான். |
கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும் - தண்டக வனத்திடத்துஎன் அத்தையாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்த மூக்கு முதலியன அறுப்புண்ட குறைபாடும்; கரனார் பாடும் - கரன் இறந்ததும்; யானுடை எம்பி வீந்த இடுக்கணும் - என்னுடைய தம்பி அக்க குமாரன் அழிந்த துன்பமும்; பிறவும் எல்லாம் - மற்றைய (அசோகவனம் அழிந்தமை முதலியனவுமான) யாவும்; மானிடர் இருவராலும் - இரண்டு மனிதர்களாலும்; வானாம் ஒன்றினாலும் - ஒரு குரங்கினாலும்; ஆனிடத்து - உண்டாயின என்றால்; என் உளவீரம் - என்னிடத்து உள்ள வீரம்; அழகிற்றே - அழகுடையதே !; அம்ம ! என்றான்- என்ன ஆச்சரியம் என்று (இந்திரசித்து) கூறினான். 'இவ்வளவு துன்பமும், இருமானிடர்களாலும், ஒரு குரங்கினாலும் நேர்ந்தது என்றால், என் வீரம் அழகிற்றே' என்று இகழ்ச்சிக் குறிப்புடன் பேசினான் இந்திரசித்து. ஆனிடத்து -உண்டாயின என்றால். ஆயின இடத்து என்பது ஆனிடத்து எனத் தொக்கது. (44) |