தம்பியின் உடலைக்கண்டு சோகமும் கோபமும் கொள்ளுதல் 5761. | நீப்புண்டஉயிர ஆகி, நெருப்புண்ட நிறத்தில் தோன்றி, ஈர்ப்புண்டற்குஅரிய ஆய பிணக் குவடு இடறச் செல்வான்; தேய்ப்புண்டதம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்புண்டசெம்பின் தோன்ற, கறுப்புண்ட மனத்தன், கண்டான், |
நீப்பு உண்டஉயிர ஆகி - நீங்குதல் அடைந்தஉயிரை உடையவாய்; நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி - நெருப்பை ஒத்த நிறமுடையனவாய்க் காணப்பட்டு; ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய - இழுக்கப்படுதற்குக் கூடாதனவான; பிணம் குவடு இடற செல்வான் - பிணங்களாகிய மலைகள் தட்டித் தடுக்க போர்க்கள வழியே செல்பவனான இந்திரசித்து; தேய்ப்பு உண்ட - (அனுமனால்) தேய்க்கப்பட்ட; தம்பியாக்கை - தன் தம்பி அக்க குமாரனுடைய உயிர் நீத்த உடலை; சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்புண்டசெம்பிற் தோன்ற - (சினத்தினால்) செந்நிறம் கொண்ட தன் கண்கள்நெருப்பில் காய்ச்சப்பட்ட செம்புபோல் விளங்க; கறுப்புண்ட மனத்தன்கண்டான் - கோபம் கொண்ட மனத்தினனாகப் பார்த்தான். இந்திரசித்து,உயிர்நீத்துக் கிடந்த தன் தம்பியின் உடலைப் பார்த்து, தேய்த்தவன் ஆகிய அனுமன் மேல் கோபம் கொண்டான் என்பது கருத்து. (45) |