5763. | 'வெவ் இலைஅயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி நோக்கி, வவ்வுதல் கூற்றும்ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார், அவ் உலகத்துஉளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா ! எவ் உலகத்தைஉற்றாய், எம்மை நீத்து, எளிதின் ? எந்தாய் !' |
எந்தாய் -எனது ஐயனே!; வெவ்இலை அயில் வேல் உந்தை - கொடியதும் இலை போன்ற முனையுடையதும் கூர்மை உடையதும் ஆன வேலாயுதத்தை ஏந்திய உனது தந்தையின் (இராவணனது); வெம்மையை கருதி நோக்கி - கோபத்தை ஆலோசித்துப் பார்த்து; கூற்றும் வவ்வுதல் ஆற்றான்- யமனும் (உனது உயிரைக்) கவரவல்லனல்லன்; மாறுமாறு உலகின்வாழ்வார் - மற்றும் வெவ்வேறு உலகங்களில் வாழ்பவரான; அவ் உலகத்துஉளாரும் ஒளிக்க அஞ்சுவர் - அந்தந்த உலகத்தில் உள்ளவர்களும் உன்னை மறைத்து வைக்கபயப்படுவார்கள்; எம்மை எளிதின் நீத்து - எம்மை எளிதாக விட்டு; எவ் உலகத்தை உற்றாய் - நீ வேறு எந்த உலகத்தைப் போய் அடைந்தாய் ? (என்று சொல்லி இந்திர சித்து புலம்பினான்). இராவணனுக்குஅஞ்சி, யமனும் அக்கனது உயிரைப் பறிக்க மாட்டான். மற்றைய உலகினரும் அவ்வாறே அச்சத்தால், அக்கனை மறைக்க மாட்டார்கள். அப்படியிருக்க, நீ எந்த உலகத்தில் மறைந்தாய் என்று தனது தம்பியை நினைத்து வருந்தி இந்திர சித்து புலம்பினான் என்பது கருத்து. (47) |