5764. | ஆற்றலன்ஆகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை, சீற்றம் என்றுஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி, தோற்றிய துன்பநோயை உள்ளுறத் துரந்தது அம்மா !- ஏற்றம் சால்ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன. |
ஆற்றலன் ஆகி -உடன்பிறப்பை இழந்ததனாலான துக்கத்தைப் பொறுக்க மாட்டாதவனாய் (இந்திரசித்து); அறிவு அழிந்து - அறிவு மயங்கி; அன்பால் அயரும் வேலை - தம்பிபால் தான் கொண்ட அன்பினால், தளர்ச்சியுற்று வருந்தும்போது; சீற்றம் என்ற ஒன்றுதானே - கோபம் என்ற ஒரு குணமே; மேல் நிமிர் - மேன்மேல் பொங்கி எழும்; செலவிற்று ஆகி -தன்மை உடையதாய்; ஏற்றம் சால் ஆணிக்கு - நன்றாய் உள் நுழைந்த ஓர்ஆணிக்கு; எதிர் செல ஆணி கடாயது என்ன - அது பின்வாங்கிச் செல்லமற்றோர் ஆணியைத் தாக்கி அடித்தது போல; தோற்றிய துன்ப நோயை -மனத்தினுள் தோன்றிய துன்பம் என்ற நோயை; உள் உறதுரந்தது - உள்ளேஅடங்கும்படி செலுத்தி அடக்கி விட்டது; அம்மா !- ஆச்சரியம். இதனால்,இந்திரசித்து கொண்டிருந்த துயரத்தை அவனது கோபம் எதிர்கொண்டு தாக்கி ஆழியச் செய்தது என்பதாம். இது, ஓரிடத்தில் ஆணியின் மேல் ஆணியை அடித்தால், பிந்தி அடிக்கும் ஆணி முந்தி அடிக்கப்பட்டுள்ள ஆணியை உள்ளே செலுத்தி விடுதல் போன்றது. இதனுள், சோகத்தை வீரம் மாற்றியது கூறப்பட்டது. ஒரு சுவையை, மற்றொரு சுவை மாற்றும் இயல்பு தெரிவிக்கப்பட்டது. (48) |