இந்திரசித்தைநோக்கிய அனுமன் சிந்தனை கலிவிருத்தம் 5765. | ஈண்டு இவைநிகழ்வுழி, இரவி தேர் எனத் தூண்டுறுதேரின்மேல் தோன்றும் தோன்றலை, மூண்டு முப்புரம்சுட முடுகும் ஈசனின், ஆண் தகை வனைகழல் அனுமன், நோக்கினான். |
ஈண்டு இவைநிகழ்வுழி - இவ்விடத்தில் இச்செயல்கள் நடக்கும்போது; இரவி தேர் என - சூரியனும் அவனுடைய தேரும் போல; தூண்டு உறும் தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டு - செலுத்தப்பட்ட தேரின் மீது விளங்கும் இராவணன் புதல்வனான இந்திரசித்தை சீற்றம் மேற்கொண்டு; முப்புரம் சுட முடுகும் ஈசனின் - திரிபுரங்களை எரித்தற்கு விரைந்து செல்லும் சிவபெருமானைப் போன்ற; ஆண்தகை வனைகழல் அனுமன் நோக்கினான் - ஆண்மைக் குணம் மிக்க பூண்ட வீரக்கழலை உடைய அனுமன் பார்த்தான். இரவி, தேர்உம்மைத்தொகை. அனுமனுக்குச் சிவபிரான் உவமை. அவன் சிவபிரான் அம்சமாக அவதரித்தவன் என்பதைக் குறிக்க வந்தது. (49) |