கலிநிலைத் துறை 5766. | 'வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை அன்றே முடுகிக்கடிது எய்த அழைத்தது அம்மா ! ஒன்றே, இனிவெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது இன்றே சமையும்;இவன் இந்திரசித்து !' என்பான். |
இதன்முன் சிலவீரரை வென்றேன் என்னும் மெய்ம்மை அன்றே - யான்,இதற்கு முன் சில அரக்க வீரரை போரில் வென்றேன் என்னும் உண்மை அல்லவா; முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா - மிக்க விரைவாக வருமாறு (இவனை) இங்குக் கூப்பிட்டது; இனி வெல்லுதல் தோற்றல் ஒன்றே அடுப்பது உள்ளது - யான், இனி வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பவற்றுள் ஒன்றே அடையக்கூடியதாகும்; இன்றே சமையும் - (அவ்விரண்டில் ஒன்று) இன்றைக்கே அமையும்; இவன் இந்திரசித்து என்பான் - இவன் இந்திரசித்து என்பவனே ஆவான். இந்திரசித்தின்வீரத்தைப் பற்றிக் கேள்வியுற்றதனாலும், பிராட்டியை இலங்கையில் தேடியபோது இவனை மாளிகையில் கண்டதனாலும், வருபவன் இந்திரசித்தே என்று அனுமன் தெளிந்தான். (50) |