அரக்கர் படையுடன்அனுமன் பொருதல் 5769. | அக் காலை,அரக்கரும், யானையும், தேரும், மாவும், முக் கால் உலகம்ஒரு மூன்றையும் வென்று முற்றிப் புக்கானின் முன்புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை, மிக்கானும்,வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான். |
அக்காலை -இவ்வாறுஅனுமான் எண்ணிக் கொண்டு நின்றபொழுது; உலகம் ஒரு மூன்றையும் முக்கால் வென்று - மூன்று உலகங்களையும் (ஒருமுறைக்கு) மூன்று முறையாக வென்று; முற்றி புக்கானின் முன்புக்கு - எதிரில்லாமல் முடித்து இலங்கையில் வெற்றி வீரனாய்ப் புகுந்த இந்திரசித்துக்கு முன்னே வந்து; அரக்கரும், யானையும் தேரும், மாவும் - அரக்கர்களாகிய காலாட்படையும், யானை, தேர், குதிரை ஆகிய படைகளும்; உயர் பூசல் பெருக்கும் வேலை - மிக்க ஆரவாரத்தைப் பெரிதும் உண்டாக்கிய வேளையில்; மிக்கானும் - பெரியோனான அனுமனும்; வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு - சினம் கொண்டு, ஒரு ஆச்சாமரத்தைப்பிடுங்கி எடுத்துக் கொண்டு; மிக்கான் - (போர் செய்ய) பேருருக் கொண்டவனானான். இந்திரசித்துபோர்க்களம் புகுதற்கு முன்பு, நால்வகைப் படைகளும் வந்து ஆரவாரம் செய்தன. அதனைக் கண்டு அனுமனும் வெகுண்டு போருக்குத் தயாரானான் என்க. (53) |