5770. | உதையுண்டனயானை; உருண்டன யானை; ஒன்றோ ? மிதியுண்டனயானை; விழுந்தன யானை; மேல் மேல், புதையுண்டன யானை;புரண்டன யானை; போரால் வதையுண்டன யானை;மறிந்தன யானை, மண்மேல். |
யானை உதை உண்டன- (அரக்கர் சேனையில்) சில யானைகள் அனுமனால் உதைக்கப் பெற்றன; யானை உருண்டன - சில யானைகள் உருளப் பெற்றன; ஒன்றோ யானை மிதி உண்டன - இது மாத்திரமோ ? சிலயானைகள் அனுமனால் மிதிக்கப்பட்டுப் போயின; யானை விழுந்தன - சிலயானைகள் கீழே விழுந்தன; யானை மேல் மேல் புதை உண்டன - சில யானைகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் புதைந்து போயின; யானை புரண்டன - சில யானைகள் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் நிலை மாறின; யானை போரால் வதையுண்டன - சில யானைகள் போரில் வதைக்கப்பட்டன; யானை மண்மேல் மறிந்தன - மற்றும் சில யானைகள் அந்தப் போர்க்களத்தில் மல்லாந்து வீழ்ந்தன. அனுமனால்யானைப்படை அழிந்தமை கூறப்பட்டது. (54) |