5771. | முடிந்ததேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப் படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில். |
தேர்க்குலம்முடிந்த - சில தேர்க்கூட்டங்கள் முழுவதும் அழிந்தன; தேர்க்குலம் முறிந்தன - சில தேர்க் கூட்டங்கள் சிற்சில பகுதிகள் முறி்பட்டன; தேர்க்குலம் முரண் இற்று இடிந்த - சில தேர்க்கூட்டங்கள் வலிமை அழிந்து இடிபட்டன; தேர்க்குலம் இற்றன - சில தேர்க்கூட்டங்கள் மூட்டுக்கள் அற்று விழுந்தன; தேர்க்குலம் அச்சுஇற்று ஒடிந்த - சில தேர்க்கூட்டங்கள்அச்சு முறிந்து ஒடியப் பெற்றன; தேர்க்குலம் உக்கன - சில தேர்க் கூட்டங்கள் பொடியாய் உதிர்ந்தன; தேர்க்குலம் நெக்கு படிந்த - சில தேர்க்கூட்டங்கள் சிதைந்து கீழே விழுந்தன; தேர்க்குலம் படியில் பறிந்தன - சில தேர்க்கூட்டங்கள் தரையில் சாய்ந்தன. இந்திரசித்தின்தேர்ப்படைகள் பலவாறு அழிந்தமை கூறப்பட்டது. (55) |