5774.

வட்ட வெஞ்சிலை ஓட்டிய வாளியும், வயவர்
'விட்ட விட்டவெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த,
சுட்ட வல் இரும்புஅடைகலைச் சுடுகலாததுபோல்,
பட்ட பட்டனதிசையொடும் பொறியொடும் பரந்த.

     வயவர் - அரக்க வீரர்கள்;வட்டம் வெம்சிலை -  நன்கு
வளைக்கப்பட்ட கொடிய விற்களினின்றும் செலுத்திய அம்புகளும்; விட்ட
விட்ட வெம்படைகளும் -
மற்றும் மிகுதியாகப் பிரயோகித்த கொடிய
ஆயுதங்களும்; வீரன்மேல் - மகா வீரனான அனுமன் மேல்; வீழ்ந்த -
விழுந்தவைகளாய்; சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் -
நெருப்பில் காய்ந்த வலிய இரும்பு, பட்டடைக் கல்லைச் சுடாதது போல; பட்ட
பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த -
அனுமன் மேல் பட்டவை
அனைத்தும் (ஓர் இடையூறும் செய்யாது) நான்கு திசைகளிலும், நெருப்புப்
பொறிகளைச் சிந்தினவாய்ப் பரவி்ச் சென்றன.

     காய்ச்சினஇரும்பு, அடைகல்லை ஊறுசெய்ய மாட்டாது, தானே
பொறிவிட்டுச் சிதைவுறுவதுபோல, அனுமன் மேல் விழுந்த ஆயுதங்கள்,
அவனை ஊறு செய்யாது சிதைந்தன என்று கூறியவாறு.              (58)