5778.

ஆண்டநாயகன் தூதனும், அயனுடை அண்டம்
கீ்ண்டதாம் என,கிரி உக, நெடு நிலம் கிழிய,
நீண்ட மாதிரம்வெடிபட, அவன் நெடுஞ் சிலையில்
பூண்ட நாண் இற,தன்  நெடுந் தோள் புடைத்து
                                 ஆர்த்தான்.

     ஆண்ட நாயகன் -(எல்லாஉயிர்களையும்) அடிமை கொண்டருளும்
(திருமாலின் அவதாரமாகிய) இராமபிரானின் தூதனும் - தூதனான அனுமனும்;
அயனுடை அண்டம் கீண்டதாம் என - (அவ்வொலிக்கு எதிராக)
பிரம்மாண்டமே பிளந்தது என்று சொல்லும்படியாகவும்; கிரி உக - மலைகள்
பொடியாய்ச் சிந்தும்படியாகவும்; நெடும் நிலம் கிழிய - நீண்ட பூமி பிளக்கும்
படியும்; நீண்ட மாதிரம் வெடிபட - நெடிய திசைகள் பிளவுபடவும்; அவன்
நெடுஞ்சிலையில் பூண்ட நாண்இற -
இந்திர சித்தினது நீண்ட வில்லில்
பூட்டிய நாண் அற்றுப் போகவும்; தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான் -தனது நெடிய தோள்களைக் கொட்டிக் கர்ச்சனை செய்தான்.

     இந்திரசித்து,முன் எழுப்பிய ஒலிக்குக் கருவியாயிருந்த நாணும்
அறும்படி இருந்தது, அனுமன் தோள் புடைத்து ஆர்த்த ஒலி என்பது கருத்து.
                                                          (62)