5785. | ஊழிக்காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ, பாழித்தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்; ஆழிப் பல் படைஅனையன, அளப்ப அருஞ் சரத்தால், வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான். |
அவண் - அந்நிலையில்;ஊழிக் காற்று அன்ன ஒரு பரி தேர் உதவ - ஊழிக்காலத்தில் வீசும் பெருங்காற்றுப் போல (வேகமாகச் செல்லும்) குதிரைகள் பூட்டிய ஒரு தேரை (வேறு ஒரு சாரதி) கொண்டு வந்து தர; பாழி தோளவன் - பருத்த தோள்களை உடைய அந்த இந்திரசித்து; அத்தடம் தேர் மிசை பாய்ந்தான் - அந்தத் தேரின் மீது பாய்ந்து ஏறி; பல் ஆழி படை அனையன அளப்ப அரும் சரத்தால் - பல சக்கராயுதம் போன்ற அளவிட்டுச் சொல்ல முடியாத அம்புகளால்; வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் - நீடுழி வாழ்பவனும், போர் வலிமையிற் சிறந்தவனுமான அனுமனது திரு மேனியை மூடி மறைத்துவிட்டான். அனுமனது உடம்புமறையும் படி மிகுதியாக அம்புகளை இந்திரசித்து எய்தான் என்பதாம். பாழி - பெருமையும் ஆம்; ஆழி - சக்கராயுதம்; கடலும் ஆம். (69) |