5787.

முறிந்தவில்லி்ன் வல் ஓசை போய் முடிவதன்முன்னர்,
மறிந்து போரிடைவழிக் கொள்வான், வயிர வாட்
                                  படையால்
செறிந்த வான்பெரு மலைகளைச் சிறகு அறச்
                                  செயிரா
எறிந்தஇந்திரன் இட்ட, வான் சிலையினை
                                 எடுத்தான்.

     முறிந்தவில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் -
ஒடிபட்டஅந்த வில்லி்ன் வலிய ஓசை அடங்குவதற்கு முன்னே, (இந்திரசித்து);
போரிடை மறிந்து வழிக் கொள்வான் -
போரை மீண்டும் தொடர வேண்டி;
வயிர வாள் படையால் -
வச்சிராயுதம் என்னும் வாளால்; செறிந்த வான்
பெரு மலைகளை -
அடர்ந்த மிகப்பெரிய மலைகளை; சிறகு அற செயிரா
எறிந்த இந்திரன் -
இறகுகள் அற்றுப் போகும் படி சினங் கொண்டு
துணித்தவனான தேவேந்திரன்; இட்ட வான்சிலையினை எடுத்தான் -
திறையாகக் கொடுத்த பெரிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டான்.

     அந்த வில்ஒடிந்தவுடனே வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டான்
இந்திரசித்து. அது, இந்திரன் தனது தோல்விக்குப் பிறகு, திறையாக
இ்ந்திரசித்துக்குக் கொடுத்தது.                                 (71)