5792.

உய்த்தவெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப,
கைத்தசிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்;
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி,
அத் தடம் பெருந்தேரொடும் எடுத்து, எறிந்து,
                                ஆர்த்தான்.

     உய்த்த வெம்சரம் - அவ்வாறு இந்திரசித்து செலுத்திய கொடிய
அம்புகள்; உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப - தனது மார்பிலும் கைகளிலும்
அழுந்த; மாருதி - அனுமன்; கைத்த சிந்தையன் நனிதவகனன்றான் -
வெறுத்த மனத்தினனாய், மிகவும் கோபம் மேற் கொண்டவனாய்; வித்தகன்
சிலை விடுகணை விசையினும் கடுகி -
ஞானவடிவனான இராமபிரான்
வில்லில் தூண்டும் அம்பின் வேகத்தினும் அதிக வேகமாகச் சென்று;
அத்தடம் தேரொடும் எடுத்து - அந்த மிகப் பெரிய தேருடனே
(இந்திரசித்தைத்) தூக்கி; எறிந்து ஆர்த்தான் - மேலே வீசி எறிந்து
ஆரவாரஞ் செய்தான்.

     அனுமன்,இந்திரசித்தைத் தேரோடு எடுத்து எறியச் செல்லும்
வேகத்துக்கு, இராமபிரானது அம்பின் வேகம் உவமை கூறப்பட்டது. வித்தகன்
- மேலோன். (இராமபிரான்)                                   (76)