5833. | அவ் உரை,தூதரும், ஆணையால், வரும் தெவ் உரைநீக்கினான் அறியச் செப்பினார்; இவ் உரைநிகழ்வுழி, இருந்த சீதையாம் வெவ் உரைநீங்கினாள் நிலை விளம்புவாம்; |
தூதரும் - தூதுவர்களும்;அவ் உரை - அந்தச் சொல்லை; ஆணையால் - இராவணனது கட்டளைப்படி; வரும் - தம் எதிரே அனுமனைப் பற்றிக் கொண்டு வரும்; தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் - பகைவர் என்ற சொல்லையே நீக்கிய இந்திரசித்து தெரிந்து கொள்ளும்படிக் கூறினார்கள்; இவ் உரை நிகழ்வுழி - இந்த வார்த்தை எங்கும் பரவிய போது; இருந்த சீதையாம் - அசோகவனத்தில் காவலில் இருந்த சீதையாகிய; வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் - கொடியபழிச் சொல்லின் நீங்கியவளது நிலையைக் கூறுவோம். இது கவிக்கூற்று.தெவ் உரை நீக்கினான்; பகைவர்களே இல்லாதபடி செய்தவன் என்பது கருத்து, வெவ் உரை நீங்குதலாவது பழி நாணித் தகை சான்ற சொற்காத்தலாகும். (29) |