அரக்கர் அனுமனைச்சூழ்ந்து ஆரவாரித்தல்

5801.

உற்றகாலையின், உயிர்கொடு திசைதொறும் ஒதுங்கி
அற்றம்நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று
                               அரக்கர்-
சுற்றும் வந்து,உடல் சுற்றிய தொளை எயிற்று
                              அரவைப்
பற்றிஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால்.

     உற்ற காலையின்- (இவ்வாறு இந்திரசித்து அனுமன் அருகில் வந்து)
சேர்ந்தபோது; உயிர் கொடு - முன் அனுமனுடன் போர் செய்ய அஞ்சித்தம்
உயிரைக் காப்பாற்றிக் கொண்டு; திசைதொறும் ஒதுங்கி - நான்கு
திசைகளிலும் ஓடி மறைந்து; அற்றம் நோக்கினர் - (அனுமனுக்குச்) சோர்வு
நேரும் சமயத்தை எதிர் பார்த்து; நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்பலர் -
நின்ற, ஒளி தங்கிய பற்களையுடைய அரக்கர்களில் பலர்; சுற்றும் வந்து -
அனுமனை நாற்புறங்களிலும் சூழ்ந்து வந்து; உடல் சுற்றிய தொளை எயிற்று
அரவை -
அனுமன் உடம்பைச் சுற்றிக் கொண்டிருந்த, துவாரமுள்ள
விஷப்பற்களை உடைய அரவ வடிவான அந்தப் பிரம்மாத்திரத்தை; பற்றி
ஈர்த்தனர் தெழித்தனர் -
பிடித்து இழுத்து ஆர்த்தனர் பெருமுழக்கமிட்டு
அனுமனை அதட்டினார்கள்.                                    (85)