5806. | மைத் தடங்கண்ணியர், மைந்தர், யாவரும், பைத் தலை அரவுஎனக் கனன்று, 'பைதலை இத்தனைபொழுதுகொண்டு இருப்பதோ ?' எனா, மொய்த்தனர்;கொலை செய முயல்கின்றார், சிலர். |
மை தடம்கண்ணியர் - மையிட்ட பெரியகண்களை உடையவர்களானமகளிரும்; மைந்தர் - ஆடவரும்; யாவரும் - ஆகிய எல்லோரும்;பைத்தலை அரவு என கனன்று - படத்தோடு கூடிய தலையை உடையபாம்பு போலக் கோபம் கொண்டு; பைதலை - இந்தக் குரங்குப் பயலை;இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ எனா - இவ்வளவு நேரம்உயிருடன் வைத்துக் கொண்டு நாம் வாளா இருப்பதோ என்று கூறி; மொய்த்தனர் - அனுமனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டனர்; சிலர் கொலை செய முயல்கின்றார் - சில அரக்கர்கள், அனுமனைக் கொலை செய்ய முயற்சி செய்வாராயினர். கண்ணியர்மைந்தர் யாவரும் மொய்த்தனர்; சிலர் கொலை செய்ய முயன்றனர் என்பதாம். (2) |