5808. | 'எந்தையை,எம்பியை, எம் முனோர்களைத் தந்தனை போக'என, தடுக்கின்றார் பலர்; 'அந்தரத்துஅமரர்தம் ஆணையால், இவன் வந்தது' என்று,உயிர்கொள மறுகினார் பலர். |
பலர் - வேறு பலர்;எந்தையை எம்பியை - 'எமது தந்தையையும், எமது தம்பியையும்; எம்முன்னோர்களை - எமது தமையன்மார்களையும்; தந்தனை போகு எனா - மீளக் கொணர்ந்து கொடுத்துஅப்புறம் செல்' என்று சொல்லி (அனுமனை); தடுக்கின்றார் - மறித்துக் கொள்பவரானார்கள்; பலர் - வேறு பலர்; இவன் அந்தரத்து அமரர்தம் ஆணையால் வந்தது என்று - இவன், வானில் உள்ள தேவர்களின் கட்டளையினால் இங்கு வந்ததாகும் என்று மாறாக எண்ணி; உயிர் கொள மறுகினார் - அந்த அனுமன் உயிரைப் பற்றிப் பறிக்கமுடியாது வருந்தினார்கள். தேவர்கள்அரக்கர்களுக்குப் பகைவர்களாதலால், அவர்களது ஆணையின் படி அனுமன் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பது பல அரக்கர்களது எண்ணம். மறுகுதல் - மனம் குழம்புதல்; இவனை எங்ஙனம் கொல்வது என்று மனம் கலங்கினர் பலர். (4) |