5810. | கொண்டனர்எதிர் செலும் கொற்ற மா நகர், அண்டம் உற்றது,நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது- கண்டம் உற்றுளஅருங் கணவர்க்கு ஏங்கிய குண்டலமுகத்தியர்க்கு உவகை கூரவே. |
கொண்டனர் -அனுமனைப்பற்றி இழுத்துக் கொண்டு செல்பவர்களுக்கு; எதிர் செலும் கொற்ற மாநகர் - எதிரே வேடிக்கை பார்க்கவருகின்ற வெற்றியை உடைய இலங்கை நகரில் உள்ள அரக்கர்கள்; நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது - பெரிதாய் முழக்கும் ஆரவார ஒலி; கண்டம் உற்று உள - (அனுமனால் போரில்) கழுத்து அறுபட்டு அழிவடைந்துள்ள; அரும் கணவர்க்கு ஏங்கிய குண்டல முகத்தியர்க்கு - தமது அரிய கணவர்களுக்காக ஏக்கமுற்று வருந்திய, குண்டலம் விளங்கும் முகத்தை உடைய அரக்கமகளிர்க்கு; உவகை கூர - மகிழ்ச்சி மேலோங்கிவர,; அண்டம் உற்றது - உலகம் முழுதும் பரவிற்று. தம்கணவன்மார்களைக் கொன்ற அனுமனைக் கட்டி இழுத்து வரும் செய்தியைக் கண்ட அரக்கர்களது பேரொலியைக் கேட்டதனால், கணவர்களை இழந்த மகளிர்கள் மகிழ்ந்தனர் என்க. (6) |