இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டவாறு அனுமன் செல்லுதல் 

5811.

வடியுடைக்கனல் படை வயவர், மால் கரி,
கொடியுடைத்தேர், பரி கொண்டு வீசலின்,
இடி படச்சிதைந்த மால் வரையின், இல் எலாம்
பொடிபடக்கிடந்தன கண்டு, போயினான்.

     வடி உடை கனல்படை வயவர் - கூர்மை பொருந்தியநெருப்பைப்
போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்ட போர் வீரர்களையும்; மால்கரி
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் -
பெரிய யானை, கொடிகட்டிய
தேர், குதிரை ஆகியவற்றை (தான்) கையில் எடுத்து வீசி எறிந்ததனால்;
இடிபட சிதைந்த மால் வரையின் -
இடி விழுதலால் சிதைவுபட்ட பெரிய
மலைகள் போல; பொடி பட கிடந்தன இல் எலாம் - பொடிப் பொடியாக
நொறுங்கிக் கிடந்தனவான இலங்கை நகரத்து வீடுகளை எல்லாம்; கண்டு -
(மகிழ்ச்சியோடு) பார்த்துக் கொண்டே; போயினான் - (அனுமன் அந்நகரத்து
வீதிகளின் வழியாய்ச்) சென்றான்.

     அனுமன் இலங்கைநகரத்து மாளிகைகளின் இடிபாடுகளைப் பார்த்துக்
கொண்டு, மகிழ்ச்சியை வெளிக்காட்டாது வீதி வழியே சென்றான் என்பது
கருத்து.                                                (7)