5818. | அரமியத்தலம்தொறும், அம் பொன் மாளிகைத் தரம் உறுநிலைதொறும், சாளரம்தொறும், முரசு எறிகடைதொறும், இரைத்து மொய்த்தனர்- நிரை வளைமகளிரும், நிருத மைந்தரும். |
நிரைவனைமகளிரும் - வரிசையான பலவளையல்களை அணிந்த அரக்க மகளிரும்; அரமியம் தலம் தொறும் - மாளிகையின்மேல் உள்ள நிலா முற்றங்களிலும்; அம் பொன் மாளிகை தரம் உறு நிலை தொறும் - அழகிய பொன்மயமான வீடுகளின் மேல் நிலைகளிலும்; சாளரம் தொறும் - பலகணிகளிலும்; முரசு எறிகடை தொறும் - பேரிகைகள் முழக்கும் இடங்களிலும்;இரைத்து மொய்த்தனர் - முழக்கமிட்டுக் கொண்டு கூடி நெருங்கியிருந்தனர். வீதியில் இடம்இல்லாமையைத் தெரிவிக்கின்றது. (14) |