5820.

அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர்,
நரம்பினும் இனியசொல் நாக நாடியர்,
கரும்பு இயல்சித்தியர், இயக்கர் கன்னியர்,
வரம்பு அறுசும்மையர், தலைமயங்கினார்.

     அரம்பையர் -தேவமகளிர்; விஞ்சை நாட்டு அளகவல்லியர் -
வித்தியாதர நாட்டுக் கூந்தலை உடைய கொடி போன்ற பெண்கள்; நரம்பினும்
இனிய சொல் நாக நாடியர் -
யாழ் நரம்பின் இசையை விட இனிய
சொற்களை உடைய நாகலோகத்துக் கன்னியர்; கரும்பு இயல் சித்தியர் -
(தம்மை நுகர்வார்க்கு) கரும்பு போன்ற சுவையை நல்கும் சித்த
கணப்பெண்கள்; இயக்கர் கன்னியர் - யட்சகுலமகளிர்; வரம்பு அறு
சும்மையர் -
அளவற்ற இரைச்சலுடையவர்களாய்; தலை மயங்கினார் -
எல்லா இடங்களிலும் வந்து கூடினார்கள்.

     இவர்கள்,இராவணனால் அபகரிக்கப்பெற்று இலங்கையில் கொண்டு
வந்து வைத்திருந்த அவனுடைய காதல் மகளிர்கள். சும்மை - ஒலி. 'இழுமென்
சும்மை' - (பொருந. 65)