5822. | அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் கரக்கிலர், நெடுமழைக் கண்ணின் நீர்; அது, விரைக் குழல்சீதைதன் மெலிவு நோக்கியோ ? இரக்கமோ ?அறத்தினது எளிமை எண்ணியோ ? |
அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் - அரக்க ஆடவர் மகளிர்களுடைய கூட்டம் அல்லாதவர்களான தேவர் முதலிய அரம்பையர்கள்; நெடு மழை கண்ணின் நீர் கரக்கிலர் - நெடிய மழை போலும், (பெருகிய தம்) கண்ணீரை மறைக்காதவர் களாயினர்; அது - அவ்வாறு கண்ணீர் பெருகிய செயல்; விரை குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ ? - நறுமணமுள்ள கூந்தலை உடைய சீதா பிராட்டியின் துன்பத்தைக் கருதியோ ?; இரக்கமோ ? - அனுமனுக்கு உண்டான துன்பத்தால் ஏற்பட்ட இரக்கத்தாலோ ?; அறத்தினது எளிமை எண்ணியோ ? - தருமத்தினது, எளிமையைக் கருதியதனாலோ (நேர்ந்தது). அரக்கர்யாவரும், அச்சம், வெறுப்பு சினம் ஆகியவை கொண்டிருக்க, தேவர் முதலியோர் இரக்கமும் துன்பமும் கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டது. (18) |