5825.

'வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து
அளவுறு முதியரும்அறிய ஆணையால்
விளைவினைவிளம்பினால், மிதிலை நாடியை,
இளகினன்,என்வயின் ஈதல் ஏயுமால்;

     வளை எயிற்றுஅரக்கனை உற்று - வளைந்த பற்களை உடைய
அரக்கனாகிய இராவணனை அடைந்து; மந்திரத்து அளவுறு முதியரும்
அறிய -
ஆலோசனைச் சபைக்கு உரியராக அளந்து குறிப்பிடப்பட்ட
முதியோர்களும் அறியும்படி; ஆணையால் விளைவினை விளம்பினால் -
இராமபிரான் கட்டளைப் படி, மேல் நிகழக்கூடிய செயல்களை நான் எடுத்துக்
கூறினால்; இளகினன் - (இராவணன்) மனவுறுதி குலைந்து நெகிழ்ந்து;
மிதிலை நாடியை என் வயின் ஈதல் ஏயும் -
மிதிலை நாட்டவளான
சீதையை என்னிடம் கொடுத்து விடக்கூடும்.

     சிந்தைச்சீர்மையால் விளையக் கூடிய முதற் பயன் இது. சீதையைச்
சிறை வீடு செய்தல். ஆல் - ஈற்றசை.                           (21)