5827. | 'வாலிதன்இறுதியும், மரத்துக்கு உற்றதும், கூல வெஞ்சேனையின் குணிப்பு இலாமையும், மேலவன் காதலன்வலியும், மெய்ம்மையான், நீல் நிறத்துஇராவணன் நெஞ்சில் நிற்குமால். |
வாலிதன்இறுதியும் - வாலியின் அழிவும்;மரத்துக்கு உற்றதும் - மராமரத்துக்கு நேர்ந்த அபாயமும்; வெம்கூல சேனையின் குணிப்பு இலாமையும் - கொடிய குரங்குப் படையின் அளவற்ற தன்மையும்; மேலவன் காதலன் வலியும் - சூரிய குமாரனான சுக்கிரீவனுடைய வலிமையும்; நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் - (நான் சென்று சொல்வதால்) நீல நிறத்தை உடைய இராவணனது மனத்தில்; மெய்ம்மையால் நிற்கும் - உள்ளபடி பதியும். சிந்தைச்சீர்மையின் மூன்றாவது பயன்; இராவணன் மனத்தில், வாலியின் மரணம் முதலியன பதிதல் ஆகும். (23) |