5828. | 'ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும் நீதியும் மனக்கொள நிறுவி, நின்றவும் பாதியின்மேல்செல நூறி, பைப்பையப் போதலே கருமம்'என்று, அனுமன் போயினான். |
ஆதலால் -'ஆகையால்; அரக்கனை எய்தி - அரக்கனாகிய இராவணனைச் சந்தித்து; ஆற்றலும் நீதியும் மனம் கொள நிறுவி - இராமபிரானுடைய வலிமையையும், நெறி முறையையும் அவன் உள்ளத்தில் பதியும்படிச் செய்து; நின்றவும் - (அதன் பின்பும் இசையாது போனால்) (இதுவரை என்னால் கொல்லப்பட்டவை போக) மீதியாக உள்ள அரக்கர் சேனைகளில்; பாதியின் மேல் செல நூறி - பாதிக்கு மேலாக அழித்துவிட்டு; பைபைய போதலே கருமம் - (அவசரப் படாமல்) மெதுவாகப் போவதே நான் செய்யத்தக்க காரியமாகும்; என்று - என்று எண்ணி; அனுமன் போயினான் - அனுமன் அடங்கி, அந்த அரக்கருடன் சென்றான். நிறுவுதல், நூறுதல், போதல் இவைகளைத் தனது கடமையாகக் கொண்டான் அனுமன். ஒன்றன் பின் ஒன்றாக இவைகளைச் செய்வது என்ற முடிவுடன், அடக்கமாக அனுமன் அரக்கருடன் சென்றான் என்க. நூறுதல் - அழித்தல். (24) |