5838.

'ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
"ஊழிகாட்டுவென்" என்று உரைத்தேன்; அது
வாழி காட்டும்என்று உண்டு; உன் வரைப் புயப்
பாழி காட்டி,அரும் பழி காட்டினாய்.

     ஆழிகாட்டி -இராமபிரானது கணையாழியை யான் காணுமாறு
கொண்டுவந்து கொடுத்து; என் ஆருயிர்
 காட்டினாய்க்கு -(போக்கநினைத்த)
என் அரிய உயிரை அழியாது நிற்கச் செய்த உனக்கு; ஊழி காட்டுவென்
என்று உரைத்தேன் -
(அதற்கு ஈடாக) கற்ப கோடி காலம் உன் வாழ்நாள்
நீடிக்கும் என்று உனக்கு உறுதிமொழியான ஆசி கூறினேன்; அது வாழி
காட்டும் என்று உண்டு -
அது பொய்க்காது உன் வாழ்நாளை நீட்டிக்கும்
என்பது உறுதியாக உள்ளது; (அவ்வாறாக); உன் வரை புயம் பாழி காட்டி -
உனது மலை போன்ற தோள்களின் வலிமையை போரில் தோன்றச் செய்து,
(முடிவில்); அரும்பழி காட்டினாய் - நீக்குதற்கு அரிய ஒரு பழியை
உண்டாக்கிக் கொண்டாய். (இதற்கு நான் என்ன செய்வேன்).

    திருவாழியேபிராட்டியின் உயிரை நிலைக்கச் செய்ததால், 'ஆழிகாட்டி
என் ஆருயிர் காட்டினாய்' என்றாள். 'அரும்பழி' என்பது இராமதூதன்
பகைவர் கையில் அகப்பட்டதாகும். 'என் வாழ்த்துப் படி நீடூழி
வாழ்வை'யாயினும் அரக்கர் கையில் அகப்பட்டதனால், வாழ்த்து
பழுதுபட்டதோ என்று நினைத்து வருந்தினாள்                    (34)