5850. | வானரங்களும், வானவர் இருவரும், மனிதர் ஆன புன்தொழிலோர் என இகழ்கின்ற அவரும், ஏனை நின்றவர்இருடியர் சிலர், ஒழிந்து யாரும், தூ நவின்ற வேல்அரக்கர்தம் குழுவொடு சுற்ற, |
வானரங்களும்- குரங்குகளும்; வானவர் இருவரும் - திருமால், சிவபிரான் ஆகிய இருதேவர்களும்; மனிதர் ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் - மனிதர் என்னும் அற்பத் தொழில்களை உடையவர்கள் என்று (இராவணனால்) இகழப்படுகின்றவர்களும்; ஏனைய நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து - மற்றும் விலகி நின்றவர்களான சில முனிவர்களும் நீங்கலாக; யாவரும் தூ நவின்ற வேல் அரக்கர் தம் குழுவொடு சுற்ற - மற்றை எல்லோரும், மாமிசம் படிந்த வேலாயுதங்களை உடைய அரக்கர்களின் கூட்டத்தோடு ஒப்பச் சூழ்ந்து நிற்கவும். அரக்கர் போலவேமற்றைய தேவ கணத்தினரும், இராவணனுக்குக் குற்றேவலர்களாய் அவனைச் சூழ்ந்து நின்றனர் என்பது கருத்து. தூ - மாமிசம்; நவின்ற - நாற்றத்தால் தெரிவிக்க என்ற கருத்தில் வந்துள்ளது. (46) |