5853.

ஊடினார்முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண,
கூடினார் முகக்களி நறை ஒரு முகம் குடிப்ப,
பாடினார் முகத்துஆர் அமுது ஒரு முகம் பருக,
ஆடினார் முகத்துஅணி அமுது ஒரு முகம் அருந்த,

     ஊடினார் முகத்துஉறுநறை - தன்னுடன் ஊடலால் பிணக்கம்
கொண்ட மாதர்களின் முகங்களினிடத்துத் தோன்றுகின்ற இன்பச்சுவையாகிய
தேனை; ஒரு முகம் உண்ண -  (தனது பத்து முகங்களில்) ஒரு முகம்
நுகரவும்; கூடினார் முகம் - கூடினமகளிரது முகத்திலே; களி நறை -
தோன்றுகின்ற களிப்பாகிய மதுவை; ஒரு முகம் குடிப்ப - (அவனுடைய)
மற்றொரு முகம் பருகவும்; பாடினார் முகத்து ஆர் அமுது - இசை
பாடினமகளிரது முகத்தில் தோன்றுகின்ற காதல் குறிப்பாகிய அருமையான
அமுதத்தை; ஒரு முகம் பருக - ஒரு முகமானது அருந்தவும்; ஆடினார்
முகத்து அணி அமுது -
தன்முன்
 விருப்போடு ஆடியமகளிர் முகத்தில்
தோன்றும் அழகாகிய அமிர்தத்தை;
ஒரு முகம் அருந்த -
மற்றொரு முகமானது உண்ணவும்.

     ஊடுதல், கூடுதல்,பாடுதல், ஆடுதல் செய்யவும் மகளிர்களது
காதற்குறிப்பை, அவர்கள் முகத்தில் கண்டு அனுபவித்து நின்றான் இராவணன்
என்பது கருத்து.                                              (49)