5857. | மாறுஅளாவிய, மகரந்த நறவு உண்டு மகளிர் வீறு அளாவியமுகிழ் முலை மெழுகிய சாந்தின் சேறு அளாவிய சிறுநறுஞ் சீகரத் தென்றல், ஊறு அளாவிய கடுஎன, உடலிடை நுழைய,+ |
மகரந்த நறவுஉண்டு - (மலர்களில் உள்ள) மகரந்தப் பொடிகளுடன் கலந்த தேனைப்பருகி; மகளிர் வீறு அளாவிய - மகளிர்களுடைய செருக்குற்று விளங்கும்; முகி்ழ் முலை மெழுகிய சாந்தின் - அரும்பு போன்ற கொங்கைகளில் பூசப்பெற்ற சந்தனத்தின்; சேறு அளாவிய சிறு நறும் சீகரம் தென்றல் - சேற்றிலே கூடிக்கலந்த இளமையும் மணமும் குளிர்ச்சியும் உடைய தென்றல் காற்று; மாறு அளாவிய - (இராவணனுக்குத்தான்) எதிர் செய்யுமாறு பகைமை கொண்டு; ஊறு அளாவிய கடு என - துன்பம் கலந்த விடம் போல; உடலிடை நுழைய - அவனது உடம்பிலே நுழைந்து வருத்தவும்; சிறு, நறும்,சீகரம் தென்றல், நறவு உண்டு, சாந்தின் சேறு அளாவி, இராவணனின் உடம்பில் விடம் போல நுழைந்து வருத்தியது என்க. இராவணனது ஆணைக்கு அஞ்சி முன்பு இலங்கை நகருள் புகமுடியாதிருந்த காற்று (கறங்கு கால்புகா) இப்போது, சிறு வடிவில் (தென்றல்) பக்க பலத்துடன் புகுந்து அவன் உடலையே பகைமை உணர் வுடன் வாட்டியது, என்ற நயம் உணரத்தக்கது. (53) |