இராவணனைக்கண்ணுற்ற மாருதியின் மனநிலை 5859. | இருந்த எண்திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்; கருந் திண்நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்; 'திருந்துதோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி, உருந்து நஞ்சுபோல்பவன்வயின் பாய்வென்' என்று உடன்றான். |
இருந்த எண்திசைக் கிழவனை - இவ்வாறு வீற்றிருந்தஎட்டுத் திக்குகளுக்கும் தலைவனான இராவணனை; மாருதி எதிர்ந்தான் - அனுமன் தன் எதிரே கண்டான்; கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் - (கண்டதும்) கரிய வலிய பாம்பைக் கண்ட கருடன் போல; கனன்றான் 'திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி - மனம் கொதித்தவனாய், 'சிறந்து விளங்கும் என்னுடைய தோள்களில் கட்டியிருக்கிற பிரமாத்திரத்தைச் சிதறடித்து; உருந்து நஞ்சு போல்பவன் வயின் பாய்வென் என்று உடன்றான் - கோபித்து, விடம் போன்றவனான இந்த இராவணன் மேல் இப்போது பாய்கின்றேன்' என்று உக்கிரங் கொண்டான். இராவணனைக்கண்டதும், அனுமன் எண்ணிய எண்ணம் கூறப்பட்டது. உருத்து - உருந்து; எதுகை நோக்கி மெலிந்தது. இராவணனுக்குக் கருநாகமும், அனுமனுக்குக் கருடனும் உவமைகள். (55) |