5860.

'உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம்' என்று
                                 ஒழிந்தேன்;
பிறங்கு பொன்மணி ஆசனத்து இருக்கவும்
                                 பெற்றேன்;
திறங்கள் என்பல சிந்திப்பது ? இவன் தலை சிதறி,
அறம் கொள்கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்'
                          என்று அமைந்தான்.

     உறங்குகின்றபோது உயிர் உண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் -
தூங்கும்போது ஒருவன் உயிரைப் போக்குதல் பழிக்கு இடமாகும், என்று
எண்ணி, (முன்பு இவனைக் கொல்லாது) விட்டிட்டேன்; பிறங்கு பொன் மணி
ஆசனத்து இருக்கவும் பெற்றேன் -
(இப்போது இவன்) விளங்கும்
பொன்னாலும் மணியாலும் ஆன சிம்மாசனத்தில் வீற்றிருக்கவும்
காணப்பெற்றேன்; பல திறங்கள் சிந்திப்பது என் ? - (இனி) பலவகையாக
ஆலோசிப்பதற்கு என்ன இருக்கிறது ? இவன் தலை சிதறி - (இப்பொழுதே)
இவன் தலைகளைச் சிதறி விழச் செய்து; அறம் கொள் கொம்பினை மீட்டு -
அறத்திற்கு ஒரு பற்றுக்கோடு போல விளங்கும் பூங்கொம்பு போன்றவளான
பிராட்டியை சிறையினின்று மீட்டுக் கொண்டு; உடன் அகல்வென் என்று
அமைந்தான் -
விரைவில் மீண்டு செல்வேன்' என்று அனுமன் உறுதி செய்து
கொண்டான்.

     அனுமனின் உறுதிகூறப்பட்டது. கொம்பு; உவமை ஆகுபெயர்.   (56)