5862. | ' "மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி ஊடு இரிந்திட,முடித் தலை திசைதொறும் உருட்டி, ஆடல்கொண்டுநின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா ! தேடி வந்தது, ஓர்குரங்கு" எனும் வாசகம் சிறிதோ ?+ |
தேடி வந்தது ஓர்குரங்கு - சீதையைத் தேடிக்கொண்டு வந்ததாகிய ஒரு குரங்கு; மாடு இருந்த இவன் புணர் மங்கையர் - இவ்விராவணன் அருகில் இருப்பவர்களும், இவன் சேரத்தக்கவர்களுமான மகளிர்கள்; மயங்கி ஊடு - திகைத்து உள்ளே ஓடிப்போம்படி; முடித்தலை திசை தொறும் உருட்டி - கிரீடம் அணிந்த இவனது தலைகளைப் பலதிக்குகளிலும் உருளச் செய்து; ஆடல் கொண்டு நின்று - வெற்றி கொண்டு (தான் சிறிதும் அழிவுறாது) நிலை பெற்று நின்று; ஆர்க்கின்றது - ஆரவாரஞ் செய்கின்றது; அது அம்மா கொடிது - அந்தக் குரங்கு அந்தோ ! மிகவும் கொடியது'; எனும் வாசகம் - என்று எல்லோரும் சொல்லும் புகழ் வார்த்தையைப் பெறுதல்; சிறிதோ ? - சிறியதாகுமோ ? (அன்று மிகப் பெரிது என்றபடி). 'நான் நினைக்கிறபடி செய்து முடிப்பேனானால், என்னை உலகத்தார் புகழ்வர். அதுவே எனக்குப் பெருமை தருவதாகும்' எனக் கருதினான் அனுமன் என்பதாகும். (58) |