5869. | 'ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந் தூதன் ஆம்தன்மையே தூய்து' என்று, உன்னினான்; வேத நாயகன்தனித் துணைவன், வென்றி சால் ஏதில் வாள்அரக்கனது இருக்கை எய்தினான். |
ஆதலான் -மேற்கூறிய காரணங்களால்;அமர் தொழில் அழகிற்று அன்று - (இப்போது) போர் செய்தல் அழகுடையதன்று; அருந்தூதனாம் தன்மையே தூய்து - சிறப்புடைய தூதன் என்ற நிலையை மேற்கொள்ளுதலே நன்மை தரத்தக்கது; என்று உன்னினான் - என்று எண்ணியவனாகி; வேதம் நாயகன் தனி துணைவன் - வேதங்களுக்குத் தலைவனான இராம பிரானுக்கு ஒப்பற்ற உதவி செய்பவனாகிய அனுமான்; வென்றிசால் - வெற்றிமிக்க; ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் - பகைவனான வாள் ஏந்திய இராவணனுடைய கொலு வீற்றிருக்கும் இடத்தை நெருங்கினான். மேல் நிகழவேண்டியவற்றை எண்ணி, தானே தன்னை இராவணன்பால் இராமன் அனுப்பி தூதன் எனக் காட்டிக் கொள்வதே தூயது எனத் துணிந்தான் அனுமன் என்க. (65) |