இந்திரசித்துஅனுமனைப் பற்றி இராவணனிடம் கூறுதல் 5870. | தீட்டியவாள் எனத் தெறு கண் தேவியர் ஈட்டிய குழுவிடைஇருந்த வேந்தற்குக் காட்டினன்,அனுமனை-கடலின் ஆர் அமுது ஊட்டிய உம்பரைஉலைய ஓட்டினான். |
கடலின் ஆர் அமுதுஊட்டிய உம்பரை - பாற்கடலினின்றும் தோன்றிய அரிய அமுதத்தினை உண்டு சாவா வரம் பெற்ற தேவர்களையும்; உலைய ஓட்டினான் - வருந்துமாறு (போரில்) புறங்காட்டி ஓடச் செய்து வென்றவனான இந்திரசித்து; தீட்டிய வான் என தெறு கண் தேவியர் - கூர்மையாகத் தீட்டப் பெற்ற வாளாயுதம் போல ஆடவரது நெஞ்சுறுதியை அழிக்க வல்ல கண்களை உடைய உரிமைமகளிர்; ஈட்டிய குழு இடை - ஒன்று சேர்ந்திருந்த கூட்டத்தின் நடுவில்; இருந்த வேந்தற்கு - வீற்றிருந்த அரசனாகிய இராவணனுக்கு; அனுமனைக் காட்டினான் - அனுமனைக் காண்பித்தான். (அறிமுகப்படுத்தினான்) தூது வந்து நகரைஅழிவு செய்தவனை அரசாங்க முறையில் வைத்து ஆராயும் கருத்தினனாய் இராவணன் தன் தேவியர்களுடன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அப்போது, இந்திரசித்து, குற்றவாளியைக் கொண்டு போய் நிறுத்தியது போல, அனுமனை இராவணனுக்குக் காண்பித்தான் என்க. ஈட்டிய, ஊட்டிய என்பன இங்கு தன் வினைப் பொருளில் வந்தன. (66) |