5873. | அன்ன ஓர்வெகுளியன், அமரர் ஆதியர் துன்னிய துன்னலர்துணுக்கம் சுற்றுற, 'என் இவண் வரவு? நீ யாரை ?' என்று, அவன் தன்மையைவினாயினான்-கூற்றின் தன்மையான். |
கூற்றின்தன்மையான் - யமன் போன்ற கொடுந்தன்மை உடையவனான இராவணன்; அன்ன ஓர் வெகுளியன் - அத்தன்மைத்தான ஒரு பெருங்கோபம் உடையவனாய்; அமரர் ஆதியர் துன்னிய துன்னலர் - தேவர்கள் முதலாக உள்ள தன்னைச் சூழ்ந்திருந்த பகைவர்களை; துணுக்கம் சுற்றுற - அச்சம் சூழும்படி, (அனுமனை நோக்கி); என் இவண் வரவு ? நீ யாரை ? என்று - நீ இங்கு வந்த காரணம் என்ன ? நீ யார் ? என்று; அவன் தன்மையை வினாயினான் - அந்த அனுமனுடைய நிலைமையை வினவலானான். இராவணன் அனுமனைநோக்கி 'என் இவண் வரவு ? நீ யாரை ?' என்று கேட்கத் தொடங்கும் வார்த்தை, அவனைச் சூழ்ந்திருந்த தேவர்களாகிய பகைவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வண்ணம் இருந்தது என்க. துன்னலர் - பகைவர். (69) |