5876.

'அந்தணர்வேள்வியின் ஆக்கி, ஆணையின்
வந்துற விடுத்ததுஓர் வய வெம் பூதமோ ?
முந்து ஒருமலருளோன், "இலங்கை முற்றுறச்
சிந்து" எனத்திருத்திய தெறு கண் தெய்வமோ ?

     அந்தணர்வேள்வியின் ஆக்கி - முனிவர்கள்யாகத்திலிருந்து
தோற்றுவித்து; ஆணையின் வந்து உறவிடுத்தது - கட்டளைப்படி இங்கு
வந்து அடையும் வண்ணம் அனுப்பிய; ஓர் வயவெம் பூதமோ ? - ஒரு
வலிமை மிக்க கொடிய பூதந்தானோ ?; முந்து ஒரு மலருளோன் -
எவற்றுக்கும் முன்னதாக (பழமையான) ஒரு தாமரை மலரின் இருப்பவனான
பிரமன்; இலங்கை முற்றுற சிந்து என திருத்திய தெறுகண் தெய்வமோ ?
-
இலங்கை முழுவதையும் அழித்து விடு என்று ஏவி, புதிதாகப்
படைத்தனுப்பிய பகைத்து எரிக்கும் கண்களை உடைய ஒரு தேவன்தானோ ?

     முனிவர்கள்என்பவர் தண்ட காரணியத்துள் வசிப்பவர். வேள்வி -
அபிசார யாகம். முந்து ஒரு மலர் என்பது திருமாலின் திருநாபிக்கமலம்.  (72)