அறுசீர் ஆசிரியவிருத்தம் 

5880.

'ஈட்டிய வலியும், மேல்நாள் இயற்றிய தவமும்,
                            யாணர்க்
கூட்டிய படையும்,தேவர் கொடுத்த நல் வரமும்,
                            கொட்பும்,
தீட்டிய பிறவும்,எய்தித் திருத்திய வாழ்வும் எல்லாம்,
நீட்டிய பகழிஒன்றால், முதலொடு நீக்க நின்றான்;

     ஈட்டிய வலியும் -நீங்கள்தேடிச் சேர்த்துக் கொண்ட
வலிமைகளையும்; மேல் நாள் இயற்றிய தவமும் - (முன் நாளில்) நீங்கள்
செய்து வைத்துள்ள தவத்தின் வலிமையையும்; யாணர் கூட்டிய - புதிது
புதிதாக நீங்கள் சேர்த்து வைத்துள்ள அரிய படைகளையும்; தேவர் கொடுத்த
நல்வரமும் -
தேவர்கள் உங்களுக்கு அளித்துள்ள நல்ல வரங்களையும்;
கொட்பும் -
(மற்றும் நீ்ங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும்; தீட்டிய பிறவும்
-
(வெற்றித் தூண்களில்) நீங்கள் எழுதிவைத்துள்ள கீர்த்தி முதலிய
பிறவற்றையும்; எய்தித் திருத்திய வாழ்வும் - நீங்கள் அடைந்து, பின்பு
சீர்திருத்திக் கொண்ட அரச வாழ்வையும்; மற்றும் - உங்கள் தொடர்புடைய
அனைத்தையும்; நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் -
நீண்ட தன் அம்பு ஒன்றினால் அடியோடு அழிக்கச் சங்கற்பித்து நின்றவன்
(அவன்)

     உங்கள் மாயவாழ்வெல்லாம் எங்கள் கோமானால் மாயும் என்றான்
அனுமன். வலி, தவம், படை, வரம், கொட்பு, முதலியனவாக திருத்தமுறப்
பெற்ற வாழ்வு அனைத்தையும் பகழி ஒன்றால் நீக்க நின்றவன் (அவன்) என்க.
                                                          (76)