5884. | 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி, சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,- அயோத்தி வந்தான்; |
மூலமும் நடுவும்ஈறும் இல்லது - முதலும் நடுவும் முடிவும் இல்லாததுஎன ; ஓர் மும்மைத்து ஆய காலமும் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனஇலக்கண முறையால் வகுத்துக் கூறப்படும் மூன்று காலங்களையும்; கணக்கும்- இவ்வளவினது என்று கணித நூலால் கூறப்படும் எண்ணிக்கையையும்; நீத்தகாரணன் - கடந்து நின்ற (எல்லாப் பொருள்களுக்கும்) காரணனாய அந்தமுழுமுதல் பொருள்தான்; சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து -சூலத்தையும், சக்கரம் சங்கு ஆகியவற்றையும், கமண்டலத்தையும் (தன்கையில்கொள்ளாது) விட்டு; கை வில் ஏந்தி - கையில் வில்லை ஏந்திக் கொண்டு;தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு - பழமையாகத்தனக்கு உரிய இடங்களாகிற ஆலிலையையும் தாமரை மலரையும் கைலாயமலையையும் இடமாகக் கொள்ளாது விட்டு,; அயோத்தி வந்தான் -அயோத்தி மாநகரில் இராமபிரானாக அவதரித்தான். காலம்நித்தியமானது என்பதை உணர்த்துகின்றது 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது' என்ற தொடர். கணக்கு- கணித நூலார் கூறும் எண்ணிக்கை அளவு. மும்மைத்தாயகாலம் - இலக்கண நூலார் கூறும் இறப்பு நிகழ்வு எதிர்வு என்றகால அளவு. இவை எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். அவனே காரணன் ஆவான். (80) |