5885.

'அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த
                            நீதித்
திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி,
                           தீயோர்
இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக,
                           ஈண்டுப்
பிறந்தனன்-தன்பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு
                         அறுப்பான்.

     தன் பொன்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் - தனது அழகிய
திருவடிகளைத் துதிப்பவர்களான அடியார்களது பிறவி நோயைப்
போக்கியருளுபவனான பரம்பொருள்; அறம் தலை நிறுத்தி -  அறத்தை
நிலை நிற்கச் செய்து; வேதம் அருள் சுரந்து -  வேதங்கள் அருளோடு;
அறைந்த நீதி திறம் -
ஓதிய நீதியின் வழிகளை; உலகம் தெரிந்து பூண -
உலகத்தார் அறிந்து மேற்கொண்டொழுகும்படி; செம் நெறி செலுத்தி -
அவர்களைச் செம்மையான வழியிலே செலுத்தி; தீயோர் இறந்து -
கொடியவர்கள் இறந்து; உக நூறி - ஒழியும் படி அழித்து; தக்கோர் இடர்
துடைத்து -
நன்மக்களுக்கு உள்ள துன்பங்களைப் போக்கி; ஏக - பிறகு
தன்னுடைச் சோதிக்குப் போவதாகச் சங்கற்பித்து; ஈண்டு பிறந்தனன் -
பூமியில் (அயோத்தியில்) திருவவதாரம் செய்துள்ளான்.

     உலகத்தில்அறத்தை நிலை நிறுத்துதல், வேதம் கூறும் நீதிகளை உலக
மக்கள் பின்பற்றி நடக்குமாறு அவர்களை நல்வழிப்படுத்துதல், அல்லோர்களை
அழித்தல், நல்லோர்களைக் காத்தல் ஆகிய அவதாரத்தின் பயன்கள்
கூறப்பட்டன. 'பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய துஷ்கிருதாம்,
தர்மஸம்ஸ்தாபனார்த்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே' - என்ற கீதாவாக்கியத்தை
அடியொற்றியது இந்தக் கவிதை என்று கூறுவர் அறிஞர்கள். திறம் - வழி. (81)