5886. | 'அன்னவற்குஅடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்; நன்னுதல்தன்னைத்தேடி நாற் பெருந் திசையும் போந்த மன்னரில்,தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி- தன் மகன்,அவன்தன் தூதன் வந்தனென், தனியேன்' என்றான். |
அன்னவற்கு அடிமைசெய்வேன் - சக்கரவர்த்தித்திருமகனாக அவதரித்த அந்த இராமபிரானுக்கு அடிமைத் தொழில் செய்பவன்யான்; நாமமும் அனுமன் என்பேன் - பெயரும் அனுமன் என்று சொல்லப்படுவேன்; நல் நுதல் தன்னைத் தேடி - நல்ல நெற்றியை உடைய சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு; நால் பெரும் திசையும் போந்த மன்னரில் - நான்கு பெருந் திசைகளிலும் சென்ற தலைவர்களுள்; தென் பால்வந்த தானைக்கு மன்னன் வாலி தன் மகன் - தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன் வாலியின் மகனாகிய அங்கதன்; அவன் தன் தூதன் தனியேன் வந்தனென் என்றான் - அவனது தூதனாய் நான் ஒருவன் இங்கு வந்தேன் என்று அனுமன் கூறினான். 'அன்னவற்கு அடிமைசெய்வேன்; நாமும் அனுமன் என்பேன்; வாலி தன் மகன் தூதன் வந்தனன்' என்று சொற் சுருக்கமாகக் கூறுதல் மூலம், அனுமன், தன்னையும், தான் வந்த காரியத்தையும் தெரிவித்துக் கொண்டு விட்டான். (82) |