இராவணன்,வாலியின் நலன் உசாவலும் அனுமன் விடையும் 

 5888.

'அஞ்சலை,அரக்க ! பார் விட்டு அந்தரம்
                      அடைந்தான் அன்றே,
வெஞ் சின வாலி;மீளான்; வாலும் போய் விளிந்தது
                      அன்றே;
அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால்
                                 மாழ்கித்
துஞ்சினன்;எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்'
                                 என்றான்.

     அரக்க ! அஞ்சலை- இராவணனே ! பயப்படாதே; வெம்சின வாலி
பார்விட்டு அந்தரம் அடைந்தான் மீளான் -
கொடிய கோபத்தினனாய
வாலியானவன் பூமியை விட்டு விண்ணுலகம் சேர்ந்தான் இனித்திரும்பி
வரமாட்டான்; அன்றே வாலும் போய் விளிந்தது - அன்றைக்கே
அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது; அஞ்சன மேனியான் தன் அடு
கணை ஒன்றால் -
மை போன்ற கருநிறம் உடைய இராமபிரானது பகையை
அழிக்கவல்ல அம்பு ஒன்றினால்; மாழ்கி துஞ்சினன் - வருந்தி இறந்தான்;
எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் - (இப்போது) எங்களுக்கு
அரசன் சூரியகுமாரனான சுக்கிரீவன் என்று கூறினான். (அனுமன்); அன்று, ஏ
-
அசைநிலைகள்.

     வாலியின் மரணத்தைக் கூறுதலின் மூலம், இராமபிரானது
வில்லாற்றலையும் இராவணனுக்கு உணர்த்தி விட்டான் அனுமன் இதில்,
எள்ளல் சுவையும் நகைச்சுவையும் அமைந்துள்ளன.                 (84)