5903. | ' "இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை நச்சி, நாளும்நகை உற, நாண் இலன், பச்சை மேனிபுலர்ந்து, பழி படூஉம் கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ ? |
இச்சைத்தன்மையினில் - ஆசையின் இயல்பினால்;பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற - அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து - வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு (காமதாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூ உம் கொச்சை ஆண்மையும் - பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ ? - சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா ? (சேராது என்றபடி). பிறன் மனைநயத்தலின் இழிவு கூறப்பட்டது. 'எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்ற குறளின் (145) கருத்தை அடியொற்றியது. (99) |