5905.

' "வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்,
மறுப்புஉண்டாயபின், வாழ்கின்ற வாழ்வினின்,
உறுப்பு உண்டாய்நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால்,அது அழகு எனல் ஆகுமே.

     வெறுப்பு உண்டாயஒருத்தியை - தன்னைக்காதலிப்பவனிடம்
வெறுப்புக் கொண்ட ஒரு பெண்ணை; வேண்டினால் - விரும்பினால்; மறுப்பு
உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் -
அவளால் மறுக்கப்படுதல்
உண்டான பின்பும், (உடனே இறந்து போகாமல்) வெட்கம் கெட்டு உயிரோடு
வாழ்கின்ற வாழ்வைவிட; உறுப்பு உண்டாய் - காண்பதற்கு அழகான
அவயமாய்; நடு ஓங்கிய நாசியை அறுப்பு உண்டால் - முகத்தின் நடுவிலே
உயர்ந்திருக்கின்ற (எடுப்பான) மூக்கை ஒருவரால் அறுக்கப்படுவதை
அடைந்தால்; அது அழகு எனல் ஆகுமே - அந்த மூக்கு அற்ற முகம்
அழகுடைத்து என்று சொல்லலாம் அல்லவா ?;

     மறுப்புண்டவாழ்வை விட நாசி அறுப்புண்ட (வாழ்க்கை) முகம்
அழகானது என்று அனுமன் கூறினான்.                         (101)