5908. | ' "ஈறு இல் நாண் உக, எஞ்சல் இல் நல் திரு நூறி, நொய்தினைஆகி, நுழைதியோ ?- வேறும், இன்னும்நகை ஆம் வினைத் தொழில் தேறினார் பலர்காமிக்கும் செவ்வியோய் ! |
இன்னும் நகை ஆம்- (மற்றும்) பிறர் சிரித்தற்கு; வினைத் தொழில் -இடமான பல தொழில்களை; தேறினார் பலர் - செய்தலில் தேறியவர்; காமிக்கும் செவ்வியோய் - பலராலும் விரும்பப்படும் சமயத்தை உடையவனே !; ஈறு இல் நாண் உக - அழிவின்றிக் காக்கத்தக்க நாணம் கெடும்படி; எஞ்சல் இல் நல் திரு நூறி - குறைவற்ற (உனது) அரச செல்வத்தையும் அழித்துக் கொண்டு; நொய்தினை ஆகி வேறும் நுழைதியோ - சிறுமைக்குணம் உள்ளவனாய் (நீதி வழிக்கு) வேறுபட்ட இடுக்கு வழியான தீய நெறியில் செல்வையோ ? தீயதொழிலில்தேறியவர்க்கு, காட்சிக்கு எளியவன் இராவணன் என்பதும், அவன் பிறன்மனை விழைதலாகிய தீய இடுக்கு வழியில் செல்லும் சிறுமைக் குணத்தினன் என்பதும் உணர்த்தப்பட்டது. (104) |