5910. | ' "ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும், ஓது பல்கிளையும், உயிரும் பெற, சீதையைத்தருக" என்று எனச் செப்பினான், சோதியான்மகன், நிற்கு' எனச் சொல்லினான். |
ஆதலால் -ஆகையால்;தன் அரும் பெறல் செல்வமும் - தனது, பிறர் பெறுதற்கு அரிய செல்வத்தையும்; ஓது பல் கிளையும் உயிரும் பெற - சொல்லப்படுகின்ற பலவகைச் சுற்றத்தவரையும், உனது உயிரையும் இறவாதிருக்கப் பெறுமாறு; சீதையைத் தருக என்று என - சீதையை இராமபிரானிடம் கொண்டு வந்து தருவாய் என்று கூறும்படி; சோதியான் மகன் நிற்கு செப்பினான் - ஒளிவடிவினான சூரியன் மகன் சுக்கிரீவன் உனக்குச் சொல்லி அனுப்பினான்; என சொல்லினான் - என்று (அனுமன் இராவணனை நோக்கிக்) கூறினான். சீதையைத்தராவிடில் உனது செல்வம் முதலிய அனைத்தும் தொலையும் என்று அனுமன் இராவணனுக்கு உணர்த்தினான். இராவணனது வினாவுக்கு விடை கூறுதல் மூலம், அனுமன், அறமொழிகளையும் உபதேசங்களையும் பலவாறாக எடுத்துக் கூறியுள்ளான். இது, வகுத்துக் கூறல், கூறியது கூறல், ஓலை கொடுத்து நிற்றல் என்ற மூவகைத்தூதர் நிலையில், அனுமன் முதல் நிலையாகிய உத்தமத் தூதனாக விளங்குகின்றான் என்பதைக் காட்டுகின்றது. (106) |